ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் நாளை கட்சிகளின் சின்னம் பொருத்தும்பணி நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான 2-ம் கட்ட பயிற்சி புதுவண்ணாரப்பேட்டையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கலந்து கொண்டு பயிற்சியை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் 1635 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஏற்கனவே 8 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது. இன்னும் 2 கம்பெனி துணை ராணுவப்படை வர இருக்கிறது. அவர்கள் 75 குழுக்களாக பிரிந்து ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுடன் தமிழ்பேசும் அதிகாரியும் இருப்பார்.
சந்தேக நபர்களை பிடித்து விசாரிப்பார்கள். இரவிலும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். இரவு நேர ரோந்துப்பணியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் ஈடுபடுவார்கள்.
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நாளை கட்சிகளின் சின்னம் பொருத்தும்பணி நடைபெறும். தொடர்ந்து வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய சாப்ட்வேர் பொருத்தப்படும். வேட்பாளர்கள் முன்னிலையில் இந்தப்பணி நடைபெறும்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 370 புகார்கள் பெறப்பட்டு அதில் 60 புகார்கள் உண்மை என கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.7 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 94454 77205 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அனுப்பலாம். தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சியை இந்திய துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயர் பார்வையிட்டனர்.