அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக உயரிய முக்கியமான அரசியல் சட்ட அமைப்பு.
ஏனென்றால் கோடிக் கணக்கான ஏழை எளிய இளைஞர்களின் அரசு வேலை கனவு இந்த ஆணையத்தின் நேர்மைத் தன்மை மீதுதான் முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறது. கடந்த 22.12.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உறுப்பினர்களின் பட்டியலில் இருந்தே மீண்டும் ஐந்து உறுப்பினர்களை அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு நியமித் திருப்பது முழுக்க முழுக்க அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கவுல் தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் 99 ஆவது பக்கத்தில் “எதிர் காலத்தில் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து அம்சங்கள்” பற்றி விளக்கியிருக்கிறது. அவற்றுள், “அரசியல் சட்டத்தின் கீழ் உறுப்பினர் நியமனம் நடைபெறுவதால், அந்த உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக, தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
திறமையானவர்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு வசதியாக சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் நியமிக்கப்படுவது குறித்து தகவல் பொது களத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினராக நியமிக்கப்படுபவரின் நன்னடத்தை, அவரின் கடந்த கால நடத்தை போன்றவற்றை மிகவும் கவனமாக விசாரித்து, பரிசீலனை செய்ய வேண்டும். உறுப்பினர் நியமனத்தில் அர்த்தமுள்ள, விரிவான ஆக்கபூர்வமான ஆலோசனை நடைபெற வேண்டும்.
அரசியல் சட்டம், அரசியல் சட்ட அமைப்பான சர்வீஸ் கமிஷனில் உறுப்பினராகும் நபர்களுக்கு உள்ள நேர்மை போன்றவற்றை மனதில் கொண்டு நியமனங்களை செய்ய வேண்டும்” மிக முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், “இனி வரும் காலங்களில் இந்த அம்சங்களை கடைப் பிடிக்காமல் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் நியமனங்கள் நடைபெற்றால் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வகுத்துக் கொடுத்துள்ள அரசியல் சட்டப்படியான பதவிகளுக்கு உள்ள வெளிப்படையான தேர்வு முறையை மீறிய செயலாகவும், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நேர்மைத்தன்மைக்கே குந்தகம் விளைவிப்பதாகவும் கருதப்படும்” என்று ஆழ்ந்த பொருளுடன் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆனால் அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி ஆட்சியின் சார்பில் இப்போது நியமிக்கப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்களில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, செய்தித் துறையில் இருந்து அ.தி.மு.க. அரசுக்காக விதவிதமான விளம்பர யுக்திகளை கடைப் பிடித்து, கோப்புக்களை நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு தேர்தல் பணிகளைச் செய்தவர்.
இன்னொருவர் மிகப் பெரும் ஊழல் மின்வாரியத்தில் நடை பெற்றது என்று கூறி தலைமைச் செயலாளர் போன்றவர்கள் எல்லாம் சஸ்பென்ட் செய்யப்பட்ட தமிழக அரசின் மின் வாரியத்தில் தலைமைப் பொறியாளராக இருந்தவர். வேறு மூன்று பேரில் இருவர் வழக்கறிஞர்கள். ஒருவர் பொறியாளர். இந்த ஐந்து உறுப்பினர்கள் நியமனமும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது.
அது மட்டுமின்றி, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை, நேர்மைத்தன்மை, சுதந்திரமான செயல்பாடு போன்றவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டவர்களை நியமித்திருப்பது மிகுந்த கவலையளிப்பதோடு மட்டு மின்றி, ஆளுநர் இதற்கு எப்படி ஒப்புதல் அளித்தார் என்ற ஐயம் பிறக்கிறது.
11 பேரை நியமித்த வழக்கிலேயே, “இவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் நேரத்தில் இதில் தேர்வு நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதை ஆளுநர் பார்க்கத் தவறி விட்டார்” என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ள நேரத்தில், உயர்நீதிமன்றம் ரத்து செய்த அதே உறுப்பினர்களை இரண்டாம் முறையாக நியமிக்க ஆளுநர் எப்படி அனுமதி வழங்கினார் என்பது வியப்பாக இருக்கிறது.
ஆகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நீதி மன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக நடை பெற்றுள்ள ஐந்து உறுப்பினர்கள் நியமனத்தையும் ஆளுநர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
22.12.2016 அன்றைய சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனங்களை செய்யுமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.