பாகிஸ்தான் சுதந்திர தின விழா: எல்லைப்பகுதியில் மிகப்பெரிய கொடியை ஏற்றி கோலாகல கொண்டாட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர விழாவை அந்நாட்டு மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடியை இன்று லாகூர்-அட்டாரி எல்லைப் பகுதியில் ஏற்றப்பட்டது.

வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட பாரத தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இங்குள்ள இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது அலி ஜின்னா மிகவும் வலியுறுத்தினார்.

இதற்கு காந்தி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காதபோதிலும், பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்கு தூபமிட்டனர். இதன் விளைவாக, நமது நாட்டின் பல பகுதிகள் தாரைவார்க்கப்பட்டு பாகிஸ்தான் என்ற புதிய நாடு உதயமானது.

நமது நாட்டில் இருந்து துண்டாடப்பட்ட இந்த பாகிஸ்தானுக்கு 14-08-1947 அன்று விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நமது நாட்டுக்கு அதே நாளின் நள்ளிரவில்தான் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், பாகிஸ்தான் நாட்டு மக்கள் தங்களது 70-வது சுதந்திர தின விழாவை இன்று மிகவும் எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணியில் இருந்தே வான வேடிக்கைகள், ஆட்டம், பாட்டம் என அங்கு கொண்டாட்டம் களைகட்டியது.

 

இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் கலந்து கொண்டார். அங்குள்ள பாத்திமா ஜின்னா பூங்கா மற்றும் கராச்சி கடற்கரை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வாகா-அட்டாரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா ஏற்றிவைத்தார். சுமார் 400 அடி உயரமுள்ள கம்பத்தில் ஏற்றப்பட்ட இந்த கொடிக்கு உலகிலேயே அளவில் ‘எட்டாவது பெரிய கொடி’ மற்றும் ‘தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடி’ என்ற சிறப்பு கிடைத்துள்ளது.

அப்போது அங்கு கூடி இருந்தவர்களிடையே பேசிய ராணுவ தளபதி பாஜ்வா, கடந்த 77 ஆண்டுகளுக்கு முன்னர் இதே லாகூர் நகரில்தான் முஸ்லிம்களுக்கென்று தனியாக பாகிஸ்தான் என்ற ஒருநாடு தேவை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படியும், அதன் விதிகளின்படியும் இன்று பாகிஸ்தான் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்த அவர், நமது நாட்டுக்காக ராணுவ வீரர்கள் அளவில்லாத தியாகத்தை அர்ப்பணித்துள்ளனர்.

எதிரிகளின் குண்டுகள் வேண்டுமானால் தீர்ந்துப் போகலாம். ஆனால், எங்கள் நாட்டு வீரர்களின் மார்புகள் தீர்ந்துப் போகாது. பாகிஸ்தானை பலவீனப்படுத்த முயலும் அனைத்து சக்திகளையும் நமது அரசும் ராணுவமும் முறியடிக்கும். அதேபோல், உள்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தீவிரவாதியையும் தேடிக் கண்டுபிடித்து அழிப்போம் என்றும் அவர் சபதமேற்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *