Sunday , March 24 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாடாளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணையால் பதறும் மகிந்த

நாடாளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணையால் பதறும் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.நாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கோரினார்.

அதற்கு, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளால், நாட்டின் சட்டத்தை ஒடுக்க முடியாது என்று அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூரியவும், தம்மால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தலையீடு செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, நாடாளுமன்ற குழப்பங்கள் இதற்கு முந்திய சந்தர்ப்பங்களில் காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்லப்பட்டதில்லை என்றும், நாடாளுமன்றமே உயர் அதிகாரம் படைத்தது என்பதால், எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்துக்கு அமைய இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என்று எஸ்.பி திசநாயக்கவும் கோரினார்.

ஆனால், தவறு செய்த உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்று ஐதேகவின் பின்வரிசை உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …