சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அழுக்குகளை கழுவும் ஒன்றாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கமானது இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்று மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இதன் பணிகளை மேற்கொள்ளும் ஆறு உபகுழுக்களின் அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பிற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை.
அவ்வாறான சர்ச்சைக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என்று ஒரு தரப்பும், சர்வஜன வாக்கெடுப்பென்பது அரசுக்கு சவாலான ஒன்றாகும் எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பியின் ஆதரவுடன் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று இன்னொரு தரப்பும் தற்போது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கின்றன.
கடந்த 9 ஆம் திகதி சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.
அதே விடயத்தை வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர மங்கள சமரவீரவும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாயின் சமஷ்த் தீர்வு குறித்த சரத்துக்கள் புதிய அரசமைப்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறாயின் அரசாங்கம் சமஷ்டித் தீர்வினை வழங்கி, நாட்டை பிரிக்கப் போகின்றதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
சபை முதல்வரும், வெளிவிவகார அமைச்சரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளமையால் இது அரசின் நிலைப்பாடு தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அது உண்மையெனில், ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசு மீறுகின்றது என்றே அர்த்தமாகும்.
தேர்தல் காலத்தின்போது புதிய அரசியலமைப்பு ஒன்று அமைக்கப்படுமானால் ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல மாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இந்த அரசாங்கமானது அந்த வாக்குறுதியை மீறி நாட்டு மக்களை முட்டாளாக்கியுள்ளது.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் எவரும் சர்வஜன வாக்கெடுப்பு குறித்த கருத்திற்கு எதிர்ப்பினை வெளியிடாமல் இருப்பது, அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சோரம்போய்விட்டார்கள் என்பதையே வெளிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.