Friday , February 21 2020
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? – ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி

சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? – ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? – ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி

சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் பழம்பெரும் நடிகையுமான லதா விடுத்துள்ள அறிக்கையில், “நான் பலமுறை அறிக்கையின் வாயிலாக எந்த சூழ்நிலையிலும் என் குரு எம். ஜி. ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாகிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளையும், மூத்த பொறுப்பாளர்களையும் ஒற்றுமையுடனும், கட்டுகோப்போடும் இருந்து நல்ல முடிவு எடுத்து கட்சி உடையா வண்ணம் செயல்படுமாறு கேட்டிருந்தேன்.

அதே சமயத்தில், பொதுமக்களும் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக தலைமை இருக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

ஆனால் இப்பொழுது கட்சியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. எம். ஜி. ஆர் கட்சியை உருவாக்கும் பொழுது உடனிருந்து அவர் பட்ட கஷ்டங்களை பார்த்தவள் நான். ஆனால் இப்பொழுது அவர் பட்ட கஷ்டங்கள் வீணாகி விடுமோ என்கிற கவலை எனக்கு மேலோங்கி உள்ளது. அவர் கட்சியை உருவாக்கியதே மக்கள் சேவைக்காக மட்டும் தான். அதனை முன்னிறுத்தாமல் செயல்பட்டதன் விளைவே இந்த நிலைமை என்று தோன்றுகிறது.

ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு கட்சியின் கழகப்பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சிமுறை என்று வந்தபோது ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் படி ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திறம்பட செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா அவர்களிடம் நற்பெயர் வாங்குவதும், நம்பிக்கை சம்பாதிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆயினும், சாதாரண நகர மன்ற தலைவராக இருந்தவருக்கு எம்.எல்.ஏ பதவியை அடுத்து அமைச்சர் பதவி தந்து, இக்கட்டான சூழ்நிலைகளில் முதலமைச்சராக தனது பதவியில் ஓ. பன்னீர் செல்வத்தை அமர வைத்ததற்கு காரணம் அவரது கடமை உணர்வும் அவர் ஜெயலலிதா மீது கொண்ட விசுவாசமும் தான்.

அதனால் தான் பலபேர் உடனிருந்தாலும் ஆட்சி, கட்சி என வந்த போது பன்னீர் செல்வதிற்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்.

மெரினாவிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஜல்லிக்கட்டிற்கு போராட்டம் நடத்திய போது அனைத்து விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு, டெல்லியில் ஒரு நாள் முகாமிட்டு தமிழகத்தின் சூழ்நிலையை எடுத்துக்கூறி, மத்திய அரசின் உதவியுடன் தனது சொந்த முயற்சியில் தடையை நீக்க ஆவன செய்தார்.

இவ்வாறு திறம்பட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, தற்போதைய கழகப்பொதுச்செயலாளர் முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்? அதற்கான அவசியம் என்ன? அந்த அவசரத்தின் விளைவு தான் இன்று ஆட்சியில் இருக்கும் நம் கட்சி உடையக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையும் ஆட்சியில் அமர்ந்த நம் கட்சியினை ஆச்சரியத்துடன் பார்த்த அனைவரும் இன்று, கட்சியின் நிலையையும், ஒற்றுமையின்மையும் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலகமே நம் கட்சியினை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் திலகம் உருவாக்கிய கட்சிக்கு வந்த இந்த நிலையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மூத்த நிர்வாகிகள், முக்கியப் பொறுப்பாளர்களிடம் இருந்த நம்பிக்கையில் தான் அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் மட்டும் வெளியிட்டு வந்தேன். இந்தக் கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார் லதா.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.