Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் வியாழனன்று ஹர்த்தால்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் வியாழனன்று ஹர்த்தால்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல்போனவர்களின் தெளிவான வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணலை மாவட்டத்திலும் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 64ஆவது நாளாகவும், வவுனியாவில் 60ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 48ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் மருதங்கேணியில் 41ஆவது நாளாகவும், திருகோணமலையில் 51ஆவது நாளாகவும் நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்தப் போராட்டங்கள் தொடர்பில் அரசு தொடர்ந்தும் பராமுகமாக இருப்பதால் கடும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு, கிழக்கு முழுவதும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நாளைமறுதினம் வியாழக்கிழமை ஹர்த்தால் போராட்டத்துக்கு அந்த மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். எனினும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டத்தை நடத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்கள் தற்போது வலியுறுத்தியுள்ளன.

“வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அரசு, தனியார் போக்குவரத்துத்துறையினர், பாடசாலைகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தகத்துறையினர் தமது முழு ஆதரவை எமக்குத் தரவேண்டும். அதேவேளை, அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இந்தப் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவைத் தரவேண்டும்” என்று வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …