Thursday , March 28 2024
Home / முக்கிய செய்திகள் / ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, ஐரோப்பிய நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஸ்ரீலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சித்திரவதையில் இருந்து விடுதலை, சமாதானம் மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்காவின் பரப்புரை அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.

ஐரோப்பிய ஆணைக்குழு தவறான முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரையை முன்வைத்துள்ளது என்றும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஸ்ரீலங்கா அரசு மனித உரிமைகள் தொடர்பில் தமது முப்படையினருக்கு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதை குறித்த அமைப்புக்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குச் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐரோப்பிய ஆணைக்குழு முன்வைத்த யோசனையை தாம் நிராகரிப்பதாகவும் சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை ஸ்ரீலங்கா உரிய விதத்தில் பின்பற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்காவில் காணப்படும் சித்திரவதைகள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள இரு அறிக்கைகளுக்கும் சித்திரவதை தொடர்பாக ஐரோப்பிய ஆணையகத்தின் அறிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

ஸ்ரீலங்காவின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் குறைபாடுள்ள, பிழையான அனுமானங்களைக் கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த ஆதரவு நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளை மோசமாகப் பாதிக்கலாம்.

ஸ்ரீலங்காவுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்கலாம் என்று ஐரோப்பிய ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை உண்மையின் அடிப்படையில் ஆராயுமாறும், முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரிக்குமாறும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திடம் கேட்டுக்கொள்வதாக சர்வதேச அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மனித உரிமைகள் அமர்வில் வெளியிடவுள்ள ஸ்ரீலங்கா குறித்த அறிக்கையை முழுமையாகப் பரிசீலிப்பதற்கு உதவியாக ஸ்ரீலங்காவுக்கு ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை வழங்குவது குறித்த பரிந்துரையை அங்கீகரிப்பதற்கான கால எல்லையை நான்கு மாதங்களுக்கு நீடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த மாதத்தில் ஐபிசி தமிழ் செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்த ஸ்ரீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங் லை மார்க் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு பரிந்துரைதுள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பில் இணங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் ஐரோப்பிய பேரவை அமைச்சர்களும் தீர்மானித்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி அன்றேல் மே 12 ஆம் திகதி இதுதொடர்பிலான இறுதி முடிவு தெரிந்துவிடும் எனவும் அவர் விளக்கமளித்தார்.

ஸ்ரீலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக ஏற்றுமதித்துறைக்கு மிகவும் முக்கியத்துவமானதொன்றாக காணப்படுகின்ற ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு சாதகமான முறையில் ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைசெய்துள்ளது.

இந்தத் தருணத்தில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக ஏன் ஆணைக்குழுவானது பரிந்துரை செய்தது எதற்காக?

ஸ்ரீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆதரவாக பரிந்துரை செய்துள்ளது. இது நடைமுறையின் முடிவிடமல்ல. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல்வேறு விடயங்களில் நடைமுறைக்கு இட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் நல்லாட்சி மற்றும் பேண்தகு அபிவிருத்தி விடயத்தில் காணப்பட்ட முன்னேற்றங்களுடன் இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான தீர்மானம் தொடர்புபடுத்தி நோக்கப்பட்டது. தற்போதைய தறுவாயில் ஸ்ரீலங்காவுக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்கமுடியும் என பரிந்துரைக்க ஆணைக்குழு தீர்மானித்தமைக்கான காரணங்களாகும்.

கடந்த வருடம் முதல் உண்மையில் அதற்கு முந்திய வருடம் முதற்கொண்டு ஸ்ரீலங்கா மறுசீரமைப்பு பாதையில், நல்லாட்சியின் பாதையில், நல்லிணக்கத்தின் வழிமுறையிலும் மனித உரிமைகள் மட்டுமன்றி பேண்தகு அபிவிருத்தி மற்றும் தொழிலாளர் தராதரம் தொடர்பான பல சர்வதேச சாசனங்களை அங்கீகரித்து அவற்றை நடைமுறைக்கு இடுவதற்கு எடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அவதானமான ஐரோப்பிய ஆணைக்குழுவின் மதிப்பீட்டுடன் தொடர்புடையதாகவே இலங்கைக்கு மீளவும் ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கும் உண்மையிலேயே அது நடைமுறைச் சாத்தியமாவதற்கும் இடையிலுள்ள நடைமுறைக் காலப்பகுதி யாது?

நாம் தற்போது முதலாவது கட்டத்தில் தான் இருக்கின்றோம். ஆனால் இது முக்கியமான கட்டம் ஏனெனில் இந்த சாதகமான பரிந்துரை இல்லாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியாது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்கிச் செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பேரவை அமைச்சர்களும் (EU Council of ministers) இன்னமும் இரண்டு மாதங்கள் உள்ளன.

இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு இன்னமும் சந்தேகம் இருக்குமிடத்து அவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாச நீடிப்பைக் கோர முடியும். அந்தவகையில் இந்த நடைமுறையின் (இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதா இல்லையா) முடிவானது மார்ச் மாதம் 12 ஆம் திகதி இடம்பெறலாம்.

இல்லாவிடின் மேலும் இரு மாதம் கால அவகாலம் கோருமிடத்து மே மாதம் 12 ஆம் திகதி இந்த நடைமுறை முடிவிற்கு கொண்டு வரப்படலாம்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv