Thursday , April 18 2024
Home / முக்கிய செய்திகள் / கொழும்பு பீஜிங் நெருக்கத்தால் டில்லி அதிருப்தி! மஹிந்தவை இந்தியாவுக்கு ஒக். 14இல் அழைக்கிறது மோடி அரசு!!

கொழும்பு பீஜிங் நெருக்கத்தால் டில்லி அதிருப்தி! மஹிந்தவை இந்தியாவுக்கு ஒக். 14இல் அழைக்கிறது மோடி அரசு!!

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் – பிரசன்னம் அதிகரித்துவருவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் இந்திய அரசு, கொழுப்பு அரசை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்காக தீவிர இராஜதந்திர வியூகங்களை வகுத்துவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு அழைத்துள்ள மத்திய அரசு, அவருடன் முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளது. இந்தச் சந்திப்பு அடுத்த மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறவுள்ளது.

இந்து சமுத்திர வலயத்தில் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை சீன சார்புடையதாக இருக்கக்கூடாது என்ற எச்சரிக்கை சமிக்ஞையை காட்டும் நோக்கிலேயே இலங்கை அரசுக்கு சவாலாக தலையிடியாக அமைந்துள்ள மஹிந்தவுக்கு இந்தியா நேசக்கரம் நீட்டியுள்ளது என்றும், இது ‘இராஜதந்திர பதிலடி’ நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் பௌத்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 14ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

இவ்வேளையிலேயே மத்திய அரசின் பிரமுகர்கள் அவரைச் சந்தித்துப் பேசுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மஹிந்த அரசானது பீஜிங்சார் வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் டில்லி அரசு கடும் அதிருப்தியிலேயே இருந்தது. இதனால் ஆட்சிமாற்றத்துக்குரிய ஒத்துழைப்புகளையும் அது வழங்கியது எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. தனது தோல்வியில் டில்லிக்கும் பங்குண்டு என மஹிந்த ராஜபக்ஷவும் பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போதைய இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாயுமானால் தாம் அமைதிகாக்க மாட்டார்கள் என்ற செய்தியை இராஜதந்திர மட்டத்தில் வழங்கும் இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கையாகவே மஹிந்தவுடனான சந்திப்பு இருக்கின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதால் இந்தியா கடும் அதிருப்தியில் இருந்தது. எட்கா உடன்படிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருவதானது அதற்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதைச் சமாளிப்பதற்காகவே மத்தல விமானநிலையத்தை இந்தியாவிடம் கையளிக்க அரசு முன்வந்துள்ளது.

அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தபோதும் மஹிந்தவை தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv