Thursday , April 25 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி

வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி

வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி 108 டிகிரியும், இந்த மாதம் (மே) 1-ந்தேதி 107 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சிலர் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். நேற்று 103.3 டிகிரி வெயில் கொளுத்தியது.

இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. அதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8.40 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

தொடர்ந்து இரவு 10 மணிவரை இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அதன்பிறகு லேசான தூறல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது.

இடி-மின்னல் காரணமாக வேலூரில் இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவில் பொதுமக்கள் வீட்டுக்குள் தூங்க முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர்-37.8

வாணியம்பாடி-8.3

திருப்பத்தூர்-5.3

குடியாத்தம்-34.2

மேல் ஆலத்தூர்-60.6

மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv